இலங்கையின் சுதந்திரக்கிண்ணம் இறுதிப் பந்தில் இந்தியாவிடம் பறிபோனது


இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது.


ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6 ஓட்டங்களுக்கு பந்தை விரட்ட இந்திய அணி திரிவெற்றியைப் பெற்றது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த இருபதுக்கு – 20 முக்கோண கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இந்த முக்கோண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடின.
போட்டியை நடத்தும் இலங்கை இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்திருந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
மார்ச் மாதம் 6 ஆம் திகதி சுதந்திரக் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பமாகியது.
சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றன.
அந்தவகையில் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் விரைவில் சரிக்கப்பட்டாலும் மிகவும் நிமானமாக ஆட்டத்தை வெளிக்காட்டிய ஷபிர் ரஹ்மான் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ஏனைய வீரர்கள் பெரிதும் சோபிக்காத போதிலும் மஹமதுல்லா 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சஹால் 3 விக்கெட்டுகளையும் உண்கன்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் 167 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றிபெற்று இலங்கையின் சுந்திரக் கிண்ணத்தை பறிக்கும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணி அணித் தலைவர் ரோஹித் சர்மாவின் பொறுப்பான ஆட்டத்துடனும் டினேஷ் கார்த்திக்கின் அதிரடியுடனும் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் பாண்டியா 28 ஓட்டங்களையும் இறுதிவரை ஆட்டமிழக்காது களத்திலிருந்து அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட டினேஷ் கார்த்திக் 8 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ருபெல் ஹுசெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அணித் தலைவரிடம் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் டினேஷ் கார்த்திக்கும் தொடரின் ஆட்டநாயகனாக வொஷிங்டன் சுந்தரும் தெரிவு செய்யப்பட்டனர்.