அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா ஒலிம்பிக்’ போட்டிகள் காரணமாக சற்றே தாமதமாக நடைபெறும் என கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவும், அமெரிக்காவும் அறிவித்தன.இந்த நிலையில், “இவ்விரு நாடுகளின் கூட்டு போர்ப்பயிற்சி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இது முந்தைய ஆண்டுகளில் எந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவில் இருக்கும்” என அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் லோகன் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார். “எங்களது கூட்டு போர்ப் பயிற்சிகள், தற்காப்பு அடிப்படையிலானது. இதை ஆத்திரம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக வடகொரியா கருத வேண்டியது இல்லை” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டு போர்ப்பயிற்சி தொடர்பாக வடகொரிய ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த போர் பயிற்சி மே மாத இறுதியில் நிறைவு பெறும். இதில் அமெரிக்கா சார்பில் 23 ஆயிரத்து 700 வீரர்களும், தென்கொரியா தரப்பில் 3 லட்சம் வீரர்களும் கலந்து கொள்வார்கள்.ஜனவரி மாதம் இந்த கூட்டு போர்ப்பயிற்சி தள்ளிப்போடப்பட்ட பின்னர்தான் தென்கொரியாவுடன் முதல் சுற்று சமரசப்பேச்சு நடத்த வடகொரியா முன் வந்தது என்பது நினைவுகூரத்தக்கது.இப்போதும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சம்மதம் தெரிவித்து உள்ள நிலையில், இந்த கூட்டு போர்ப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.