வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுவரும் முதியோர்களுக்கான பணம் குறிப்பிட்ட திகதிகளில் வழங்கப்படாமையால் முதியோர்கள் பல தடவைகள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முதியோர்கள் தெரிவித்தனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தபாலகத்தில் ஒவ்வொரு மாதமும் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் அறிவித்தலுக்கமைய வழங்கப்படுகின்றது.
எனினும் கடந்த இரு மாதங்களாக அந்தப் பணமானது உரிய காலத்துக்கு வந்து சேராமையால் முதியோர்கள் பல தடவைகள் அலைந்து திரிய வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே முதியோர்களது சிரமத்தை தவிர்க்கும் முகமாக இப்பணத்தினை காலதாமதம் ஏற்படுத்தாது வழங்க ஆவன செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாதக் கொடுப்பனவு கடந்த 11ஆம் திகதி வழங்கப்பட்டது. எனினும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வழமையாக 4, 5ஆம் திகதிகளில் வழங்கப்பட்டுவிடும். வழங்க காலதாமதமாகுமானால் அதனை அறிவிக்கும் பட்சத்தில் முதியவர்கள் அலைந்து திரியவேண்டிய சுழல் ஏற்படாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரிவு தபாலகத்தினர், “மாகாண சபை அனுப்பி வைக்க தாமதம் ஆவதாலயே பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படு கின்றது எனவும், மாகாண சபை அனுப்பி வைத்தால் தாமதம் ஏற்படாதவாறு தாம் உடனடியாக வழங்குவோம்” என்று தெரிவித்தனர்.