முல்லைத்தீவில் 300 ஏக்கர் காணியை சுவீகரிக்க இராணுவம் முயற்சி!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாமை விஸ்தரிக்கும் நோக்கில் மேலதிகமான 300 ஏக்கர் காணியை சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு முயற்சிக்கு, பிரதேசமக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் திருமுறிகண்டி கிராமஅலுவலகர் பிரிவில் பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300ஏக்கர் காணியை சூழ அமைக்கப்பட்டுவந்த வேலியை இரவோடு இரவாக இராணுவத்தினர் பிடுங்கி எறிந்துள்ளதாக எமது முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலகர் பிரிவில் சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி பாரியஇராணுவ முகாமொனன்றை அமைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் முகாமை விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
இதற்கமைய தற்போது படைமுகாம் அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாக பொதுமக்களுக்கும் – அரசுக்கும் சொந்தமான 300 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையாக அந்தக் காணிகளை சூழ பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கையை அவதானித்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர், சாந்திசிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சகிதம் திருமுறிகண்டி இராணுவ முகாமுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை அழைத்து காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
படை அதிகாரிகளுடனான இந்தசந்திப்பின் போது, காணி சுவீகரிப்பை இராணுவம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், அதனையும் மீறி இராணுவம் வேலி அடைக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் திடடவட்டமாக அறிவித்தனர்.
எனினும் திருமுறிகண்டி இராணுவமுகாமின் கட்டளைத் தளபதி இல்லாத நிலையில் இரண்டாம் நிலை அதிகாரி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடியிருந்ததுடன், தனது மேலதிகாரிக்கு மக்களின் கோரிக்கைகளை தெரிவித்து அதற்கமைய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் திருமுறிகண்டி படை முகாமுக்கு எதிரில் பல மணிநேரங்களாக முகாமிட்டிருந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் களைந்து சென்றிருந்தனர்.
இந் நிலையிலேயே  மாதம் 24 ஆம்திகதியான நேற்றைய தினம் இரவோடு இரவாக இராணுவம் பொதுமக்கள் மற்றும் அரசினது காணிகளைசுற்றி அமைத்திருந்த வேலியை அகற்றியிருக்கின்றது. இன்றைய தினம் அந்தப் பகுதிக்குசென்ற போது இதனை நேரில் கண்டதாக பிரதேச மக்கள் எமது முல்லைத்தீவு செய்தியாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.