முல்லைத்தீவில் உந்துருளித் திருட்டில் ஈடுபட்ட தாய், மகள் உட்பட்ட ஐவா் கைது!!!

முல்லைத்தீவில் உந்துருளித் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினை முல்லைத்தீவுப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இரு பெண்கள் உள்ளிட்ட ஜந்துபேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவு நகர்ப் பகுதியில், அண்மைக் காலத்தில் ஒரே வகையானதும் ஒரே நிறமானதுமான ஹங் வகை உந்துருளிகள் திருடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி ஹங் வகை உந்துருளி ஒன்று திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டது.
இதற்கமைய அன்றைய நாள் குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கரைச்சி குடியிருப்பு பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை உந்துருளி ஒன்றுடன் கைது செய்தனர்.
முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கினைச் சேர்ந்த குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார், பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவின் சிறப்பு பொலிஸ் அணியொன்று, சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கள்ளப்பாடு வடக்கினைச் சேர்ந்த வீடொன்றில் சோதனை செய்தபோது அங்கு உந்துருளியின் இலக்கத்தகடு, உரிமையாளர் இல்லாத உந்துருளி ஒன்றின் பாகங்கள் என்பன மீட்கப்பட்டன.
இதனையடுத்து வீட்டில் இருந்த தாய், மகள் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டதுடன், மேலும் இவர்களது உறவினரான ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த களவில் தொடர்புடைய முதன்மை நபர் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தேடுதலின் பின்னர் அவரும் கைதுசெய்யப்பட்டார்.
எவ்வாறாயினும் கைதான ஐவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இவர்களில் தாய், மகள் உள்ளிட்ட இருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.