காலாவா? ஈழத்தமிழர்களா?

தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து வெளிவருகின்ற ‘காலா’ என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே தமிழ் திரைப்பட விழாக்குழு உட்பட நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மானம் எடுத்திருந்தார்கள்.

அதேபோன்று சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் காலா திரைப்படத்தையும் ரஜினியையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு வருவதோடு, வரும் சில தினங்களில் நோர்வே, சுவிஸ்சை தொடர்ந்து மற்றும் பல நாடுகளிலிருந்து இது தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

காலா திரைப்பத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் சமூகவலைத் தளங்கள் வழியாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை எப்படியாவது காலா திரைப்படத்தை வெளியிட்டேயாகுவோம் என்று தெரிவிக்கும் வெளியீட்டாளர்கள் தமிழ் மக்கள், குறிப்பாக ரஜினி ரசிகர்கள் திரைப்படத்தை வெற்றிபெறவைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் காலாவா? ஈழத்தமிழர்களா?