யாழ் நகர மின்சார சபை அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கொலைவெறி தாக்குதல்…
03/06/2018 இரவு 9.15 மணியளவில் யாழ் மாநகர மத்தியில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் யாழ் நகர மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் புகுந்த மர்ப நபர்கள் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை கொடூரமாக தாக்கியதுடன் அலுவலக கண்ணாடிகளையும் நொருக்கிச் சென்றுள்ளனர்…
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது… நேற்றைய தினம் 03/06/2018 இரவு 9.00 மணியளவில் யாழ் மாநகர மத்தியில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் யாழ் நகர மின் பாவனையாளர் சேவை நிலைய 021 222 2609 தொலைபேசிக்கு இராசாவின் தோட்டம் பகுதியில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. தங்களுக்கு மின்சாரம் இல்லை வந்து பார்வையிடுமாறு கோரப்பட்டது. அதற்கு பதிலளித்த அலுவலக ஊழியரால் 021 202 4444 என்னும் இலக்கத்திற்கு அழைத்து தங்கள் மின்தடையை பதிவிடுமாறு கூறப்பட்டுள்ளது. ஊழியர் கூறியதை ஏற்றுக் கொள்ளாது அவருடன் முரண்பட்டதுடன் உடனடியாக வந்து பார்வையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் பின்னரும் மாறி மாறி அழைப்பை மேற்கொண்டு தவறாக பேசியுள்ளனர். பின்னர் இரவு 9.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கியதுடன் அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து காடைத்தனம் புரிந்துவிட்டு சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக அசமந்த போக்குடன் செயற்பட்ட மின்சார சபையின் உயரதிகாரிகள் யாரும் உடனடியாக அவ்விடத்திற்கு செல்லாமல் (04/06/2018) இன்று காலையில் தான் சம்பவ இடத்தை பார்வையிட்டு பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாக காலையில் சம்பவ இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது சம்பந்தமாக மின்சார சபையின் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது மேற்படி சம்பவம் தொடர்பாக மின்சார சபை நீதிமன்றம் மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி நபர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் என உறுதிபட தெரிவித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் இனிவரும் காலங்களில் மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் மின்கட்டண நிலுவை செலுத்தாது துண்டிப்பை மேற்கொள்ள செல்பவர்களுடன் முரண்படுபவர்கள் போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.