மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாறு வேடத்தில் வந்த சுகாதார அமைச்சர்!!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர் மனித உரிமை ஆணைக்குழு வரையில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இந்த விடயத்தினை வடமாகாண சுகாதார அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனை விடுதிகளுக்கு செல்லும் நோயாளர்களை மருத்துவர்கள் சென்று பார்ப்பதில் காலதாமதம் மற்றும் அறுவைச்சிகிச்சை நிலையத்தில் சத்திரசிகிச்சை நிபுணர்களின் அசண்டையீனங்களால் பலர் தங்கள் அவயங்களை இழந்துள்ளார்கள்.
இவ்வாறுதான் அண்மையில் குருதி மாற்றுவது தொடர்பிலும் தவறான குருதி மாற்றம் மேற்கொண்ட பல நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவ மனையாக காணப்படும் மாஞ்சோலை மருத்துவமனைக்கு நோயாளர்கள் செல்வதில் அச்சம் காணப்படுகின்றது. இவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த போதும் நடவடிக்கைகள் எடுத்ததாக காணவில்லை. இந்நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் 07.06.18 அன்று நோயாளரை போன்று மாறு வேடத்தில் சென்று மருத்துவமனையின் சேவையினை பரிசோதனை செய்துள்ளதுடன் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.