டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்து, தனிமையில் வசித்துவந்த, 65 வயதுடைய, பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து, 15,000 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று, மஹாகால்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மூவர், காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாம் டெங்கு சோதனையிட வந்துள்ள அதிகாரிகள் எனத் தெரிவித்து, வீட்டுக்குள் நுழைந்து, குறித்த பெண்ணிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி, பணம், நகைகளை கொள்ளையிட்டுள்ளனர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர், கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், பிணையில் விடுதலையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய நபரும், கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.