வடமகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் அவர்கள் நோயாளி போல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதோடு மாவட்ட மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் இயங்கும் மருந்தகங்களை சோதனை செய்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனவும் அறிவித்துள்ளார்.
நேற்று காலை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மக்களோடு மக்களாக சென்று அங்கு நடைபெறும் செயல்களை அவதானித்துவிட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்களில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் பொது மருத்துவ மனையின் வெளிநோயாளர் பிரிவு மாதாந்த சிகிச்சைபகுதி உள்ளிட்ட பகுதிகளில் நோயாளர்கள் என்னபிரச்சனையினை எதிர்நோக்குகின்றார்கள் சுகாதார துறையின் ஊழியர்களின் சேவை எவ்வாறு இருக்கின்றது போன்ற விடயங்களை கவனிக்கவேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு சாதாரண நோயாளி போன்று உத்தியோக பூர்வமற்ற விதத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.
என்னை ஒரு அமைச்சராக காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து மக்களுக்கான சேவை எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பதை நான் அவதானித்தேன் இவ்வாறு சென்றது அங்கு பணிசெய்கின்ற ஊழியர்களை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது தவறுகள் கண்டுபிடிப்பதற்காகவோ மட்டும் அல்ல மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்கள் நடைமுறையில் எவ்வாறு சேவைகளை பெற்றுக்கொள்கின்றார்கள் சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றதா என்ற தேவை உள்ளது.
உத்தியோக பயணத்தின்போது பெரும்பாலான குறைகள் அங்கு பார்க்கப்படுவதில்லை நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை நேரடியாக கண்காணிக்கவேண்டும் என்பதற்காக சென்றுள்ளேன்.
இதன்போது முக்கியமான பணிகள் அவதானிக்கப்பட்டு தேவையான அறிவுறுத்தல்கள் என்னால் வழங்கப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் ஒரளவிற்கு முன்னேற்றம் காணப்படுவதாக நினைக்கின்றேன்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற எந்த மருந்தகங்களும் சரியான முறையிலான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமலும் மருத்துவரின் ஆலோசனை சீட்டு அல்லது மருந்து சீட்டு இல்லாமல் பொது மக்களுக்கு மருந்து வினயோகிப்பது போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றையும் பரிசோதிக்கவேண்டிய தேவை இருந்ததால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏழு மருந்தகங்களுக்கு மேல் நேரடியாக விஜயம் செய்து ஒரு துப்பாக்கியமான நிலை எந்த ஒரு மருந்தகமும் சரியான அனுமதிப்பத்திரமும் இல்லை சரியான தொழில் சார்ந்த மருந்தாளர்கள் அங்கு இருக்கவில்லை ஆனால் இயங்கிக்கொண்டிருக்கின்றன மருத்துவத்துறையுடன் சம்மந்தப்படாதவர்கள் மருந்தகங்களில் காணப்படுகின்றார்கள். ஒரு சில மருந்தகங்கள் மருந்து சிட்டை இல்லாமலே என்னுடன் வந்த ஊழியர்களுக்கு மருந்தினை விற்றிருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் நேரில் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர்.
உண்மையில் நோய் தாக்குகின்ற மருந்துகள் சம்மந்தமாக அதன் பக்கவிளைவுகள் அறிந்து சரியாக வழங்கவேண்டிய மருந்து வகைகள் ஒரு பலசரக்கு கடையில் விற்பது போன்று விற்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு மதுபான சாலைக்கு அனுமதிபெறவேண்டும் என்றால் ஜனாதிபதி வரைக்கும் செல்லவேண்டிய இறுக்கமான கட்டுப்பாடுகள் அரச திணைக்களங்களில் இருக்கும் போது உயிர்காக்கும் மருந்துகள் விற்கப்படுகின்ற மருந்தகங்கள் சரியான அனுமதியில்லாமல் தாங்கள் நினைப்பவர்கள் எல்லாம் ஆரம்பித்து மருந்தகம் நடத்துவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட சகல மருந்தகங்களுக்கும் எதிராக சரியான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் சரியான அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்குபவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்த வடமாகாண சுகாதார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் தெரிவித்துள்ளார்.