வேப்பிலைச் சாற்றின் நன்மை உங்களுக்குத் தெரியுமா?

கோடை காலத்தில் தோன்றும் அம்மை நோயிலிருந்தும், ஆடி மாதத்தில் தோன்றும் பல்வேறு தொற்றுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் கவசமாக வேப்பிலை உள்ளது.
அம்மை நோய் ஒருவரை பாதிக்கும்போது அவ்வப்போது மஞ்சள் நீரில் வேப்பிலையைத் தோய்த்து நோயாளிகளின் மேல் தெளிப்பது வழக்கம். இதனால் அம்மை நோயால் ஏற்பட்ட எரிச்சல், நமைச்சல் கட்டுக்குள் வருவதோடு, நோயும் விரைவில் விட்டுப் போகும்.
வேப்பிலை பிரசாதமாக சேர்க்கப்படும் ‘கூழ் வார்த்தல்’ நிகழ்ச்சியின் மூலம் ஆடி மாதத்தில் ஏற்படும் பல்வேறு தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம்.
நோயுற்றவர்கள் வீட்டிலும் பிரசவமான வீட்டிலும் நோய்க்கிருமிகள் அண்டிவிடாமல் வாயிற்படியிலேயே தடுத்து நிறுத்தும் பணியைச் செய்கிறது வேப்பிலை.
வேம்பின் மகிமை
Azadirachta indica என்பது வேம்பினுடைய தாவரப் பெயர். ஆங்கிலத்தில் இதை Neem என்றும், ஆயுர்வேதத்தில் ‘நிம்பா’, ‘அரிஷ்டபலா’ என்கிற பெயர்களாலும் குறிப்பர். இதில் சிவனார் வேம்பு, மதகிரி வேம்பு, கருவேம்பு, மலை வேம்பு, சர்க்கரை வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, நீர்வேம்பு, துருக்க வேம்பு, சன்னத் துருக்க வேம்பு, வடிவேம்பு, சந்தன வேம்பு, பெரு வேம்பு, சிறு வேம்பு என பல்வேறு வகைகள் சொல்லப்பட்டுள்ளன.
வேப்ப மரத்தின் இலை, பட்டை ஆகியவை நுண்கிருமிகளை அழிக்க வல்லன. பூஞ்சைக்காளான்களைப் போக்க வல்லன. மலேரியா உள்ளிட்ட காய்ச்சலைத் தணிக்கக் கூடியவை. வேப்பமரம் வீட்டின் முற்றத்திலோ, தோட்டத்திலோ இருக்கையில் கார்பன்டை ஆக்ஸைடு என்கிற கரியமில வாயுவை அகற்றிப் பிராண வாயுவான ஆக்ஸிஜனை அதிகப்படுத்துவதற்கு பேருதவி புரிகிறது. தொற்றுக் கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது.
தமிழகத்தில் வேப்பம்பூவை குழம்பாகவோ, துவையலாகவோ, ரசமாகவோ சமைத்து உண்ணுவது என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இது பல்வேறு நோய்களையும் தடுக்கவல்ல மருந்தாக விளங்குகிறது.
வேப்பம் வித்தில் இருந்து எண்ணெய் எடுத்தபின் எஞ்சி நிற்கும் சக்கையை வேப்பம் புண்ணாக்கு என்பர். இது பணப்பயிர்களான கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றுக்கு நல்ல உரமாக விளங்குவதோடு புழுக்கள், வெண்ணிற எறும்புகள் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. வேப்பெண்ணெயில் கலந்திருக்கும் Limonoids என்னும் வேதிப்பொருள் இப்பணிக்கு உதவுகிறது.
அரிசி, பருப்பு முதலிய உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும்போது, அதனுடன் வேப்பிலையைப் போட்டு வைப்பதால் பூச்சிகள் வராமல் தடுக்கப்படும்.
வேப்பிலையை உலர வைத்து நெருப்பிலிட்டுப் புகைப்பதால் கொசுக்கள் விரட்டி அடிக்கப்படும். வேப்பெண்ணெயில் விளக்கெரிப்பதாலும் கொசுக்கள் அகலும்.
வேப்பெண்ணெயை சிறிது நேரம் தலைக்குத் தேய்த்து வைத்திருந்து, தலைக்குக் குளிப்பதால், பொடுகுபோவதோடு தலைமுடி ஆரோக்கியம் பெறும்.
வேப்பெண்ணெய் ஓரிரு துளிகள் உள்ளுக்குச் சாப்பிடுவதால், ஈரலுடைய செயல்பாடுகள் தூண்டப்பட்டு, சீராகச் செயல்படச் செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும் இயலும்.
வேப்பிலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதனால் சொறி, சிரங்கு, படை, தேமல் போன்ற நோய்கள் குணமாகும். வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் பற்கள் வெண்மை பெறுவதோடு, ஈறுகளின் வீக்கம் கரைந்து பற்கள் கெட்டிப்படும். வாயிலுள்ள கிருமிகள் விரட்டப்பட்டு வாயின் துர்நாற்றம் விலகிப் பற்கள் ஆரோக்கியம் பெறும்.
அம்மை நோய் வந்தபோது வேப்பிலையை படுக்கையாகப் பரப்பி மேலே நோயாளிகளைப் படுக்க வைப்பதால், விரைவில் அம்மை நோயினின்று விடிவு ஏற்படும்.
வேப்பிலையைப் பொடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு அதனுடன் சம அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொண்டு சிறிதளவு எடுத்து கடுகெண்ணெய் விட்டு குழைத்து மேற்பூச்சாகப் பூசுவதால் படை எனும் நோய் குணமாகும். இக்கலவையைப் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு குடம் நீரில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளையும் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரில் உடலுக்கு குளிப்பதால் உடலைப் பற்றிய பூஞ்சைக்காளான்கள் பறந்து போவதோடு சரும நோய்கள் பலவும் தொலைந்து போகும்.
வேப்பிலைச் சாற்றை முகப்பருக்கள், கரும்புள்ளிகளின் மேல் பூசுவதால் விரைவில் குணமாகும். வேப்பம்பழத்தின் சதைப்பகுதியை நசுக்கி மேற்பூச்சாகப் பூசுவதனாலும் முகப்பருக்கள் குணமாகும்.
நீர் கொப்புளங்கள் ஏற்பட்டபோது வேப்பிலைக் கொழுந்து இலைகளைச் சேகரித்து மைய அரைத்து மேலே பூசுவதனால் கொப்புளங்கள் விரைவில் ஆறிவிடும்.