சுழிபுரம் சிறுமி கொலை! சந்தேகநபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த கொலைக்கு சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் துணைபோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று மாலை ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.
“சம்பவம் தொடர்பான விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது.
எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காட்டமுடியவில்லை. சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.
அத்துடன், சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இதனை கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை அறிந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சிறுமியின் தந்தையை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியோடு பிரதான சந்தேகநபர் இருந்துள்ளார். இதற்காக சிறுமி ரெஜினாவை கொலை செய்துள்ளனர். இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.
கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.