ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலையா? கொலையா?…

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.பாவனேஷ் பலசரக்கு கடையும், லலித் பாட்டியா தச்சுவேலையும் செய்து வந்துள்ளனர். நேற்று காலை 7.30 மணி வரை ஆகியும் கடை திறக்கப்படாததால், அருகே உள்ளவர்கள் பாவனேஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தபோது 11 பேர் இறந்து கிடந்தனர்.
பாவனேஷ் தாய் நாராயன் தேவி கழுத்து அறுக்கப்பட்டு தரையில் இறந்து கிடந்தார். அவரது மகள் பிரதீபா, இரு மகன்கள் பாவனேஷ் மற்றும் லலித் பாட்டியா, பாவனேஷ் மனைவி சவிதா, அவரது 3 குழந்தைகள் மீனு, நிதி, துரவ் மற்றும் லலித் பாட்டியாவின் மனைவி டினா, மகன் ஷிவம் ஆகியோர் கண்கள், கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.
வீட்டில் உள்ள பொருட்கள், பெண்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. கொள்ளையடிக்கும் நோக்கில் இச்சம்பவம் நடைபெறவில்லை என முடிவுக்கு வந்த பொலிசார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள சில குறிப்புகளின் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மதநம்பிக்கையை பின்பற்றியது தெரியவந்துள்ளது.
அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பில், வாய், கண்கள், கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டால் பயத்தை வென்று விடலாம், ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள், யாராவது வீட்டுக்கு வந்தால் அடுத்தநாள் இதை செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
இதனிடையே குடும்பத்தினர் வளர்த்து வந்த நாய் மட்டும், மாடியில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளது.கீழே இருந்த நாயை கொலையாளி மேலே கொண்டுபோய் விட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பொலிசார் கூறுகையில், இந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ மூவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர், ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.நாயை மாடியில் கொண்டு போய் விட்ட நபரின் கைரேகையை சேகரித்துள்ளோம், இதனை ஆய்வு செய்தபின்னரே அது யார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.
மதநம்பிக்கையா, கடன்தொல்லையா அல்லது வேறு எதாவது பிரச்சனைக்காக மொத்த குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொண்டனரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மொத்த குடும்பத்தையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.