முல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சி!

தமிழ் மக்களுடைய வாழ்விடங்களை பறித்துக் கொண்டு 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம், பௌத்த விகாரைகள் இருந்தன என பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பித்தலாட்ட கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றது.
மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாயாறு நீராவிபிட்டி ஏற்றம் பகுதியில் தமிழ் மக்களுடைய உப உணவு பயிர்ச்செய்கை காணிகளை தொல்லியல் திணைக்களத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்வதற்கு இன்று முயற்சிக்கப்பட்டது. இதனை கண்டித்து மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை குறித்த பகுதியில் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 
இதன்போது மேலும் அவர் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு பல வழிகளிலும் அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு வழியாகவே தொல்லியல் திணைக்களத்தின் இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை அமைந்திருக்கின்றது. அது போதாதென 2500 வருடங்களுக்கு முன்னர் பௌத்தர்கள் அங்கு வாழ்ந்ததாகவும், பௌத்த விகாரைகள் அமைந்திருந்ததாகவும் பித்தலாட்ட கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்கள். 
பௌத்த பிக்குகள் தங்களுடைய மத வழிபாட்டு வேலைகளையே பார்க்கவேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதை இலக்காக கொண்டு செயற்படகூடாது. மேலும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் 2ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடல்வளம் பூரணமாக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோதாதென பெருமளவு நெற்செய்கை நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், இப்போது உப உணவு பயிர்ச்செய்கை காணிகளையும் இலக்கு வைத்து 2500வருடங்களுக்கு முன்னர் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என அப்பட்டமான பொய்களை கூறுகின்றார்கள். 
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுப்பதற்காக மீண்டும் போராடும் நிலையே உருவாகும் என்றார்.