கவனிப்பராற்று கிடக்கும் பண்டாரவன்னியனின் சமாதி!

தமிழ் கூறும் நல் உலகில் தமிழையும் தமிழ் இனத்தையும் காத்து நின்று அறநெறி தழுவாது வாழ்ந்த வீர மன்னர்களின் வரிசையில் பண்டாரவன்னியனும் ஒருவர்.

பண்டாரவன்னியன் வன்னி நாட்டு  அரசரும் வன்னி நாட்டை ஆண்ட இறுதி மன்னரும் ஆவார். இவர் 1785-1803 இடைப்பட்ட ஆண்டில் வன்னி நாட்டை ஆண்டவர் இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்பதாகும். இவருக்கு பெரிய மெய்யனார், கயலாவன்னியன் என்னும் இரண்டு சகோதரர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவை தாயமாகவும் கோட்டையாகவும் கொண்டு தங்கள் ஆட்சியை நிலை நாட்டினர்.

சிங்கள மன்னர்களையும் அந்நிய நாட்டு படைகளையும் நடு நடுங்க வைத்த பண்டாரவன்னியன்; நம் தமிழ் இனத்தை பாதுகாத்த போர்வாள்; தமிழ் மக்கள் மட்டும் இன்றி ஏனைய இன மக்களின் நினைவுகளிலும் நீங்காத இடம் பிடித்துள்ளளார். அன்று தொடக்கம் இன்றுவரை நம் இனம் துரோகத்தினால் வீழ்வது இயல்பு அவ்வாறே பண்டாரவன்னியனும் துரோகத்தால் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவன்னியனின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும்  இடமாகவும் அவர் வாழ்ந்த இடமாகவும் வன்னி கருதப்படுகின்றது. கற்சிலைமடு என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது நினைவு வளைவு காணப்படுகின்றது. பல சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கும் இவ் இடம் தற்போது பராமரிப்பு இன்றி கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவது மனவேதனைக்கு உரிய ஒரு விடயமாகும். இது குறித்து நடவடிக்கை எடுப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் தலயாய கடமையாகும்.