முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாற்று பகுதியில் தமிழ் மக்கள் தொழில் செய்வதற்கு இலகுவாக கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த வாடிகள், வலைகள், படகுகள் என்பன இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 08 வாடிகளும் அதனுள் வைக்கப்பட்டிருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் எரிந்து நாசமாகின.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான இன்று இரவு தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் வாடியில் இருந்த மீனவர்களது பல லட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது படையினரும் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயினை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.