ஆபத்தான நிலையில் உள்ள முல்லைத்தீவு பொதுச் சந்தை!
முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டத்தின் சரியான பராமரிப்புக்கள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகர் சந்தை கட்டடத்தொகுதியில் மேற்கூரைக்கு கீழ் அடிக்கப்பட்டுள்ள தகரங்கள் அண்மையில் வீசிய கடும் காற்றினால் கழற்றப்பட்ட நிலையில் எப்போது கீழே விழும் என்ற நிலையில் காணப்படு-வதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மாதாந்தம் ஜம்பது இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் முல்லைத்தீவு சந்தையினை சரியாக சீர்பார்த்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த சந்தை வியாபாரிகள் முல்லைத்தீவு சந்தையில் பாரியளவிலான நிதி செலவளிக்கப்பட்டுள்ளபோது அதன் பராமரிப்பு சரியாக செய்யப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
சந்தைக்குள் உள்ள மலசல கூடங்கள் துப்பரவு செய்வதில் அக்கறையின்மை, மற்றும் மின்சாரம் தடைப்படும் நேரங்களில் இயங்குவதற்காக பாரிய மின்பிறப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது கூட இயங்காத நிலையில் காணப்படுகின்றது. வெறும் பேச்சளவில் மட்டும் தான் முல்லைத்தீவு பிரதேச சபையும் மக்கள் பிரதிநிதிகளும் காணப்படுவதாக சந்தை வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.