வவுனியாவடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெட்டுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும் மலையையும் தொல்பொருட்த்திணைக்களம் அபகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இன்றையதினம் காலை முன்னெடுக்கபட்டது. வவுனியா வடக்குப் பிரதேச செயலம் முன்பாக முற்பகல் 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமனர் உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
சுரேஷ்பிரேமசந்திரன்,வினோநோகராதலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் ,லிங்கநாதன் ,தியாகராசா உள்ளிட்டவர்களும் கிராம மக்கள்,இளைஞர் அமைப்புகள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு மக்கள் காலங்காலமாக வழிபடுகின்றனர். தற்போது அது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர். ஆலயத்துக்குச் செல்லவேண்டாமென்றும் மீறிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர். அதற்கு மறுநாள் ஆடி அமாவாசை திதி என்பதால் தொல்லியல் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் அனுமதியுடன் அங்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
கடந்த 12ஆம் திகதி மீண்டும் ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள தடையில்லையெனக் குறிப்பிட்டனர்.
ஆனால், ஆலயத்தில் மாற்றங்கள் செய்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியுள்ளனர். ஆலயத்தை சூழவுள்ள காட்டுப் பகுதி தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு செல்லக் கூடாதென்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர்களின் எல்லைக் கிராம பகுதியில் காணப்படும் இந்த ஆலயத்தை காலங்காலமாக தரிசித்து வந்த நிலையில், அதனை அபகரிக்க முறல்கின்றனர் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.