முல்லைத்தீவு வீதியில் மோட்டார் வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!

முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் இன்று கப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் கல்விளானுக்கும் கனேச புரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் வெள்ளாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிளும் மல்லாவியிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும், இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணத்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தின் போது மாந்தை கிழக்கு விநாயக புரம் ஒட்டங்குளத்தைச் சேர்ந்த அந்தோணி சுரேஸ் வயது 28 என்பவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும் இதேவேளை சம்பவ இடத்தில் உயிரிழந்த அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.புனிதகுமார் வயது 25 இவரது சடலம் முழங்காவில் வைத்தியசாலயிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை முழங்காவில் மற்றும் மல்லாவிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.