”நான் நேபாளத்தில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய போது விமான சேவையில் எனக்கு முந்திரிப் பருப்பு கொஞ்சம் தந்தார்கள். மனிதர்களை விடுங்கள். அந்த முந்திரிப் பருப்பை நாய்கூட உண்ணாது” என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக பேசியுள்ளார்.
இலங்கையின் தெற்குப் பிராந்தியத்தில் விவசாயிகள் நிகழ்வொன்றில் பேசியபோது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் முந்திரிப் பருப்பு குறித்த பேச்சின் பின்னர் இணையத்தளத்தில் பலவகையான மீம்கள் பதியப்பட்டு வருகின்றன.
”விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது யார்? இதற்கு யார் பொறுப்பு,” என்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கேள்வியெழுப்பியிருந்தார்.
”ஶ்ரீலங்கன் விமான சேவை ஒரு பில்லியன் டாலர் கடனில் இருக்கிறது. இலங்கையில் விளையும் தரமான முந்திரிப் பருப்புக்களைத் தவிர்த்துவிட்டு, மோசடி வர்த்தகர்களின் தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு தரம்குறைந்த பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்க வழி செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம்குறைந்த முந்திரிப்பருப்பு குறித்து ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.