திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றிய விரிவுரையாளரான செந்தூரன் போதநாயகி என்பவர் நேற்று முன்தினம் திருகோணமலை சங்கமித்த கடற் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இச் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் விஷேட சட்ட வைத்திய நிபுணர் உ.மயூரதன் தலமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் இப் பிரேத பரிசோதனையானது இடம்பெற்றிருந்தது.
இதன்படி குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாகவும் இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பெண் நீரில் முழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுத் திறனாலேயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக எதுவும் கூறமுடியாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணையூடாகவே உண்மை கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.