மிருசுவில், தவசிக்குளத்தில் நேற்று தங்கை மீதான தாக்குதல் முயற்சியைத் தடுக்க முயன்ற அக்கா, வாள்வெட்டில் சிக்கி, வயிற்றிலும் கையிலும் காயமடைந்தார்.
அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவரது தங்கைக்கும் அயல் வீட்டினருக்கும் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அயல்வீட்டைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் பெண்ணை வாள் கொண்டு அச்சுறுத்தித் துரத்தியுள்ளார்.
அது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது சிறுவன் தலைமறைவாகியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.நேற்றுக்காலை மீண்டும் கத்தியுடன் வந்த சிறுவன் பொலிஸ் முறைப்பாட்டை மீளப் பெறாவிட்டால் வெட்டுவேன் என்று அச்சுறுத்தினார் என்றும், அதனால் அச்சடைந்த பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தலும் முறைப்பாடு செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெண்ணின் அக்கா தங்கையின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயம் அங்கு வந்த சிறுவன் அயல்வீட்டுப் பெண்ணை வெட்ட முயன்றுள்ளார். அதைத் தடுக்க வந்த அக்கா காயமடைந்தார். வயிற்றிலும், கைகளிலும் அவர் காயமடைந்தார்.
காயமடைந்தவர் 43 வயதானவர் என்றும், 4 பிள்ளைகளின் தாய் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.