தென்னிலங்கையை திரும்பி பார்க்க வைத்த வடக்கின் படையெடுப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் ஐந்தாவது நாளான இன்று மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி தொடர்கின்றது.

யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் தற்போது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் உடல்நிலை மிகமோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது. இந்த நிலையில் அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுர சிறைச்சாலை நோக்கி பேரணியை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நடைபயண பேரணியானது தற்போது அநுராதபுரத்தை நோக்கி செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களோடு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகமும், அநுராதபுரம் ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர்.

இதேவேளை, அரசியல் கைதிகளுக்காக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அநுராதபுரம் சிறைச்சாலையை நோக்கிய படையெடுப்பு தென்னிலங்கை மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடை பயணத்தின் விளைவாக விரைவில் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இன, மத, மொழி பேதங்களை கடந்து வடக்கிலிருந்து மாணவர்கள் மேற்கொண்டுள்ள இந்த படையெடுப்பு தென்னிலங்கை ஆட்சி மையத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.