பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

image_pdfimage_print

கௌரவமான முறையில் பதவியை ராஜினாமா செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரம் பதவியை ராஜினாமா செய்வார் என அரசாங்க தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பூஜித் ஜயசுந்தர தொடர்பிலும் நாட்டின் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அண்மையில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கௌரவத்தை பாதுகாத்து கொள்ளும் வகையில் பூஜித் பதவியை ராஜினாமா செய்ய தவறினால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க நேரிடும் என கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் தொடர்பில் பொலிஸ் வட்டாரத்திற்குள்ளும், சிவில் சமூகத்திலும் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்ப்பினை கவனத்திற் கொண்டு பதவியை ராஜினாமா செய்யுமாறு பூஜித் ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.