திடீர் திடீரெனக் காணாமல் போகும் வைத்தியர்கள்!மாங்குளத்தில் மக்கள் தத்தளிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 பிரதான வீதியில் காணப்படும் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் உள்ள போதும் நோயாளர்கள் உரிய சேவைகளை உரிய நேரத்தில் பெறமுடியாது நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

காலை எட்டு மணிக்கு வருகைதந்திருந்த தாய் தன் கைக்குழந்தையுடன் பத்து மணி தாண்டியும்கூட சிகிச்சை பெறுவதற்காக காத்திருக்கும் அவலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வைத்தியர் சேவையில் ஈடுபட ஏனைய இருவர் விடுமுறையில் இருப்பதாகவும் இதனாலேயே இந்த நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள், தற்போது மாரி மழை ஆரம்பித்துள்ள நிலையில் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலை வருகின்றனர் என்றும் வைத்தியசாலையினரின் இந்நடவடிக்கையினால் அதிகளவான நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக இந்த வைத்திய சாலையை பத்துக்கும் மேற்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் பயன்படுத்துவதோடு வீதி விபத்துக்கள் பலவும் இந்த பகுதிகளுக்குள்ளேயே இடம்பெறுகிறது என்றும் இதனால் நோயாளர்கள் பல்வேறு குறைகளை எதிர்கொண்டுவருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட மக்கள்,

”அடிப்படை வசதிகள் பல போதாமல் உள்ளது. பிரேத அறை இன்மையால் மரணமடைவவர்களது உடலம் வெளியில் வைக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் காணப்ப்படும் போதும் நிர்வாக ஒழுங்கு சீரின்மை காரணமாக இருக்கிற வளங்களை கொண்டு பெறக்கூடிய சேவையை கூட சரிவர பெறமுடியவில்லை இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினர் கவனம் செலுத்துவார்களா?” என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இருப்பினும் இந்த வைத்தியாலையில் உள்ள குறைகள் தொடர்பில் பலதடவைகள் பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டதோடு வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவர் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார். இருப்பினும் நிலைமைகள் சீராகவில்லை என தெரிவிக்கப்படும் அதேவேளை நேற்றும் வைத்திய சாலையில் ஒரு வைத்தியர் மாத்திரம் சேவையில் ஈடுபட ஏனைய இருவரும் விடுமுறையில் சென்றதால் மக்கள் மிக நீண்டநேரமாக காத்திருந்து சிகிச்சைகளை பெற்று சென்றுள்ளனர்.

இந்த நிலைமையை உடனடியாக சீர்செய்து மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையும் பொறுப்புமாகும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.