யாரை கேட்டு பைக் சாவியை எடுத்தீங்க…” – டிராஃபிக் போலீஸை கதறவிட்ட இளைஞன்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன தணிக்கையின் போது, பைக் சாவியை எடுத்த போக்குவரத்து காவலரை கண்டித்து இளைஞர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ். இவர் தன்னுடைய நண்பருடன் பைக்கில் நேற்று இரவு பஜார் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், ரமேஷின் வண்டியை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். இதற்கு முறையாக ரமேஷ் பதில் சொல்லாததால், பைக் சாவியை எடுத்த போலீசார், அவரிடம் அபராதத்தை கட்டும்படி கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் பைக் சாவியை தரும்படி போராட்டத்தில் ஈடுபட்ட ரமேஷ், திடீரென அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பாராத போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். எவ்வளவு கூறியும் ரமேஷ் மின்கம்பத்தை விட்டு இறங்காததால் போலீசார், மின்சார அதிகாரிகளிடம் பேசி, அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் ரமேஷை கீழே இறங்கி வர செய்து, அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஜோதி ரமேஷ், நேற்று முன்தினம் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள காவல்துறை வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.