நாகையில் இளைஞர்கள் தொடர்ந்து கேலி செய்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள டி.மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் பூம்புகார் அரசினர் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்த மாணவி கல்லூரிக்குச் சென்று வரும் வழியில், அதே கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, விவேக் ஆகிய இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.
இதனால் மாணவி மனமுடைந்துள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் தினமும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவி நேற்று வீட்டிற்கு வந்த சோகமாக இருந்துள்ளார். பின்னர் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததை கண்ட அவரது பெற்றோர் அலறியுள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு மாணவியின் தந்தை முனியப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து முனியப்பனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் தனது மகளை கிண்டல் செய்தவர்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், வினோத் மற்றும் காளிமுத்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மாணவியை கிண்டல் செய்தது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.