7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம்!

image_pdfimage_print

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்குண்டு கிராமத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கும்(37), ரஷீயா(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், பெங்களூரில் வசித்து வந்த அசினா என்ற இளம் வயது பெண்ணுடன் பாஷாவுக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பாஷாவும், அசினாவும் தகாத உறவில் இருந்த போது, ரஷீயா நேரில் அந்த காட்சியை பார்த்து பிரச்சனை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஷா, அவருடைய தந்தை பஷீர்சாய்பு(72), தாய் அபினாபீ(65) மற்றும் அசினா ஆகியோர் சேர்ந்து ரஷீயாவை தாக்கியதுடன், மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அப்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரஷீயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது மகளை கணவர் குடும்பத்தார் கொன்றுவிட்டதாக ரஷீயாவின் தந்தை அன்வர் பொலிசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்தது.

இதில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற்காக பாஷா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.