“10 இலட்சம் பணமில்லையேல் தலையை வெட்டி கொலை செய்வதாக மிரட்டல்”

10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோமென அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று மீண்டும் இயக்கத்தினை வளர்க்க முயற்சிப்பதாகவும் தமக்கு 10 இலட்சம் ரூபா பணத்தினை கொடுக்க வேண்டும்.

அல்லது உன்னுடைய தலையை வெட்டிக்கொலை செய்வோமென தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.. எமது மக்களின் பிரச்சினைகளை நான் நேரடியாக ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு எடுத்துச் சென்று முறைப்பாடுகளை முன்வைத்து வந்துள்ளேன்.

எனக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு இல்லை என்பதனையும் என்னால் நிரூபிக்க முடியும். நான் அங்கு இருந்து வரும்போது பண மூட்டைகளை கொண்டு வந்து இங்கு உள்ளவர்களை வைத்து இயக்கம் வளர்ப்பதாக எனக்கு கொச்சைத் தமிழில் துண்டுப் பிரசுரங்கள் அடித்து ஒட்டி வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சங்கத்தில் 60 வயதை கடந்த தாய்மார்கள் தான் இருக்கின்றார்கள் இவர்களை வைத்து என்ன இயக்கம் வளர்க்க முடியும்.

எனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதுடன் கொழும்பில் உள்ள ஐ.நா தூதரத்திற்கும், மனித உரிமை அமைப்புக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மகஜர் ஒன்றினை நாளை திங்கட்கிழமை அனுப்பி வைக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.