இலங்கையில் கத்தி முனையில் தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

இலங்கை நீர்கொழும்பில் கத்தி முனையில் தாயையும், மகளையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரொருவர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதிமன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற அடையாள அணி வகுப்பின் போது தாயும், மகளும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காண்பித்துள்ளனர். செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த தாயும், மகளொருவரும் தனித்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த இருவர் தங்களை பாதாள உலகக் குழுவினர் என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன்பின்னர் தாயையும், மகளையும் கத்தி முனையில் நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

45 வயதான தாயும், 18 வயதான மகளும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க முனிதாசகுமாரதுங்க வீதியில் வதியும் 30 வயதான ரொசான் சாருக குணசிங்க என்ற நபரே சம்பவத்துடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கொட்பிரீ குமார் நேற்று பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்