பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் அதிரடியாக கைது!

அம்பாறை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பொலிஸாரினால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

பல்கலைக்கழகக் கட்டிடத்தில் தங்களது பெற்றோருடன் குறித்த மாணவர்கள் தங்கியிருந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வந்தனர்.

பகடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, சிங்கள மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரை நிர்வாகம் மூடியுள்ளது.

இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக , பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்தமாதம் 15ஆம் திகதியிலிருந்து மாணவர்களை அங்கிருந்து நீங்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு அமைய கட்டிடத் தொகுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பெற்றோர் நீங்கியிருந்த போதிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கினர்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக கட்டிடத் தொகுதியில் தங்கிய 15 மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.