மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஹ்மான்!

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான எனியோ மொரிகோனேவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்தார்.

இத்தாலியில் ‘த சஃபியன்சா யுனிவர்சிட்டி’ சார்பில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான எனியோ மொரிகோனேவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் எனியோ மொரிகோனே உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “அவரைப் பற்றி பேசியது மிகவும் பெருமையான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

விழா முடிந்ததும் உடனடியாக கிளம்பியதால் ரஹ்மான் அங்கிருக்கும் மாணவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனது. இதற்கு வருத்தம் தெரிவித்து, “அன்பான மாணவர்களே உங்களை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. எனக்கு பத்து மணிக்கு ஃபிளைட். அதனால் உங்களோடு புகைப்படத்திற்கு நிற்க முடியாமல் போனது.

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளராக வளர உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது உலகத் தரத்தில் இருக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனியோ மொரிகோனே ஏழு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.