தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இவருக்கா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையினை அடுத்து ஐந்து சிறுபான்மை கட்சிகளின் தமது ஆதரவினை ரணிலுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இலங்கையில் அரசாங்கத்தை அமைப்பது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு கட்சியினாலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேவேளை ஏனைய சிறுபான்மை கட்சிகளும் ரணிலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.