அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்!

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன் மற்றும் ஒபாமா வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருட்களை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், வெஸ்ட்செஸ்டர் பகுதியில் கிளிண்டனும், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டனும் வசித்து வருகிறார்கள். அவர்களது முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிப்பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பியுள்ளார்.

எனினும் அந்த வெடி குண்டு பார்சல், கடிதங்களை ஆய்வு செய்யும் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல், வாஷிங்டனில் உள்ள ஒபாமா வீட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலையும் அமெரிக்க உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இரு பார்சல்களும் முன்னாள் அதிபர்களின் வீடுகளுக்குச் சென்று சேரும் முன்பே கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் , அந்த பார்சல்களில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இதேபோன்று நியூயார்க்கில் சந்தேகத்திற்கிடமான பார்சல் வந்ததன் காரணமாக சிஎன்என் தொலைக்காட்சி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது முற்றிலும் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் மாளிகை நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.