வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற போது பல்வேறு இன்னல்களை அனுபவித்த வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு அண்மித்த காலப்பகுதி வரை, வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கின்றமை குறித்து அமைச்சரவையில் பேசப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிதியுதவிகளை எந்த அமைச்சின் கீழ் பயன்படுத்துவது, யார் பயன்படுத்துவது என்ற சர்ச்சையே மூன்றரை வருடங்களாக இடம்பெற்றிருந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த பொறுப்புக்களை வகித்தவர்கள், வடக்கு மக்களுக்கான வீடுகளை கூட அமைத்துக் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, தெற்கு என்பது பிரச்சினை கிடையாது நாட்டு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.