பறிபோகுமா மஹிந்தவின் பிரதமர் பதவி?

சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் தனக்கே இருப்பதாக தெரிவித்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் மூலம் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி அரசியல் சாசனத்திற்கு அமைய தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வொன்றை காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் இன்றைய (29.10.2018) தினம் மாலை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

சிறிலங்காவின் அரசியல் சாசனத்திற்கு அமைய தானே நாட்டின் பிரதமர் என்று கூறிவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் மாலை அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரணில் நிராகரித்தார்.

“ நேற்று மாலை மக்கள் முன் தோன்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கும் அமைச்சரவைக்கும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பின்னர் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டமையை நாம் அறிவோம். சிறிலங்கா அரசியலமைப்பில் 42 ஆவது சரத்தில் 4ஆம் உப சரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றில் பொரும்பாண்மையினை கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரே பிரதமராக நியமிக்கப்பட்ட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களை அழைத்து அரசியல் குழப்பம், பொருளாதார குழப்பம் மற்றும் தம்மை கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டியதை அடுத்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமாரக நியமித்ததாகத் தெரிவித்தார்.

எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றில் அதிக பெரும்பாண்மையினைப் பெற்ற நபரே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும். அதனடிப்படையில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களினை மீறி பெரும்பாண்மை இல்லாத பிரதமர் ஒருவரை நியமித்துள்ளமை தொடர்பில் நான் வருத்தமடைகின்றேன்.

தற்போது தான் செய்த தவறான விடயத்தினை மூடிக்கொள்வதற்காக சிறு பிள்ளைகள் கூட நம்பாத கதைகளை தெரிவித்து வருகின்றார். சிறிலங்காவின் வரலாற்றில் இவ்வளவு குழப்பகரமான மற்றும் நெருக்கடியான இடத்திற்கு இந்த நாடு தள்ளப்பட்டுள்ளதை இதற்கு முன்னர் நாம் கேள்விப்பட்டதும் இல்லை”.

மஹிந்த ராஜபக்சவை ஒக்டோபர் 26 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்க வைத்தமை அரசியல் யாப்பிற்கு முற்றிலும் முரணானது என்றும் குறிப்பிட்ட ரணில் இதனால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பகரமான நிலமைக்கு தீர்வு காண வேண்டுமானால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் கோரிக்கை விடுத்தார்.

“ கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது நீதிவிரோதமான, அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் சந்தர்ப்பவாத செயலாகும். இதன்போது பெறப்பட்ட பதிலை நாம் அந்த சந்தர்ப்பத்தின் போது அவதானித்தோம். ITN சுயாதீன தொலைக்காட்சி சேவை, ரூபவாஹினி மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவங்கள் எமது நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு நடந்த கொடூரத்தினை வெளிக்காட்டியது.

இன்று எமது நாடு முகம்கொடுத்துள்ள இந்த நிலைக்கு தீர்வு இருப்பது நாடாளுமன்றில் மாத்திரமாகும்.

அவசரமாக நாடாளுமன்ற அமர்வினை தள்ளிவைப்பது சம்பிரதாய முறைக்கு எதிரானது என சபாநாயகர் கரூ ஜயசூரிய கடிதமொன்றின் மூலம் காண்பித்திருந்தார்.

இன்று இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உடனடியாக நாடாளுமன்றை கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. சர்வதேசம் செயற்படுகின்ற நீதி கட்டமைப்பின் கீழ் அரசியலமைப்பிற்கு ஏற்றாற்போல செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்காரணத்தால் நான் மிகுந்த சபாநாயகர் கரூ ஜயசூரியவிடம் உடனடியாக நாடாளுமன்றை கூட்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று நாட்டிலுள்ள ஸ்தீரமற்ற நிலை இந்த நாட்டிற்கு நல்லதல்ல. அதன் காரணத்தால் மக்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நாம் மிகவும் கடினத்திற்கு மத்தியில் நடைமுறைப்படுத்தி வந்த பொருளாதாரம் இன்று சிதைவடைய ஆரம்பித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வீணாவது நாட்டினது எதிர்காலம் மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் எதிர்காலமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய தேசிய முன்னணியெனும் ரீதியில் எம்முடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளும் அதேபோல நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளும் எமது நாட்டின் ஜனநாயகம் குறித்து முன்னிற்பதாக என்பதை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பிற்கு எதிரான, சர்வாதிகார ஆட்சிக்கு இந் நாட்டை அடிமைப்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.