பிரித்தானியா விடுத்த அவசர அறிவிப்பு என்ன?

image_pdfimage_print

பிரித்தானியா தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக கருதுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று உத்தியோகபூர்வமாக பதவி ஏற்றுள்ள நிலையில் ரணிலை தான் பிரதமராக கருதுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வாயார் நாடாளுமன்றில் இலங்கை நிலைமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக கருதுகின்றது. துரித கதியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட், “பிரதமர் ரணிலின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.