பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை கோரி பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் கைதடி வளாகாத்தின் முன்பாக உள்ள A9 வீதியில் நடைபெற்றது. போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் சித்தமருத்துவபீட மாணவர்களுடன் இணைந்து குறித்த போராட்டதை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஸ்ணமீனன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மலைய மக்களின் கோரிக்கைகளான கம்பனிகளின் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்தல் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரித்தல் மலையக மக்களுக்கு வேண்டிய வாழ்வாதாரம் வீட்டுத்திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும்,

அத்தோடு வடக்கு கிழக்கு மக்கள் இன்னமும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் , காணாமல் ஆக்கப்பட்டட உறவுகளுக்கான தீர்வு போன்ற விடயங்களிலும் அரசாங்கம் தீர்வினை வழங்க முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதோடு இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பாலான பாரளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் இது வரை காலங்களில் மலையக மக்களின் ஏகப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இது மலையக அரசியல் தலைவர்களின் ஓர் மக்கள் கரிசனையற்ற பொறுப்பற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் , மக்கள் பிரதிநிதிகளான பராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.