ரணில் மீளவும் பிரதமரானால் ஒரு மணிநேரத்திற்குள் ஜனாதிபதிப் பதவியைத் துறப்பேன்!

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானால் தாம் ஒரு மணிநேரம் கூட அதிகாரத்தில் இருக்கபோவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ரணில்விக்கிரமசிங்க செய்த துரோகத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்குலகம் ரணிலைக் கொண்டுவரும் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன. என்றும் ஜனாதிபதி மைத்திரி இன்று தனது கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பை வழங்க தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.