நாட்டு மக்களுக்கு இவ்வளவு சலுகைகளா! மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

image_pdfimage_print

இலங்கை கடந்த மூன்றரை வருட காலத்தில் நிலவிய பொருளாதார மந்த நிலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றின் விளைவுகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளனர். முன்னயை அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அனுசரிக்கப்பட்ட கொள்கைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதென பிரதம மந்திரி கருதுவதாக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் புள்ளிவிபரங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் மிகவும் சாதகமான காலநிலை நிலவும் பின்னணியில் பெரும்போகம் ஆரம்பமாகி உள்ளது. நீர் வலு மின் உற்பத்தி, குடிநீர் விநியோகம், விவசாய நீர்ப்பாசம் போன்றவற்றுக்கு தேவையான அளவு நீர்த்தேக்கங்களில் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக புத்துணர்வுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. இது விவசாய உற்பத்திகள் மூலம் கூடுதல் அனுகூலங்களை பெறும் வகையில் நாட்டை தயார்படுத்த பொருத்தமான சந்தர்ப்பமாகும் என அரசாங்கம் நம்புகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் மூலம் மக்கள் மத்தியில் ஆகக்கூடுதலான சுமை ஏற்றப்பட்ட நிலையில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலான பல வேலைத்திட்டங்களை அமுலாக்குமாறு பிரதமரும், நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்காக சில உற்பத்திகள் மீதான வர்த்தக பண்ட வரி குறைக்கப்படும். ஒரு கிலோ பருப்பின் மீதான வரி ஐந்து ரூபாவாலும், கடலை மீதான வரி ஐந்து ரூபாவினாலும் உழுந்து மீதான வரி 25 ரூபாவினாலும் குறைக்கப்படும். கோதுமை விதை கிலோ ஒன்றின் மீதான ஆறு ரூபா இறக்குமதி தீர்வை சலுகை ஒன்பது ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. சீனி மீதான இறக்குமதி சலுகை பத்து ரூபாவால் குறைக்கப்படும். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறையவுள்ளது.

எரிபொருள் விலை சமூகத்தில் சகல மட்டங்களையும் சேர்ந்த மக்கள் மீது செலுத்தும் தாக்கம் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய நேற்று நள்ளிரவு தொடக்கம் சில எரிபொருட்களின் விலை மட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 10 ரூபாவாலும் ஒட்டோ டீசலின் விலை ஏழு ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகள்,சிறு விவசாய கருவிகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும். உராய்வு நீக்கியின் விலையும் பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு பதிலாக நடைமுறைச் சாத்தியமான எரிபொருள் விலை கட்டமைப்பை அமுலாக்கப் போவதாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சு அறிவிதுள்ளது.

நெல், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உற்பத்திகளுக்கு நிவாரண விலை கட்டமைப்பு அறிமுகம் செய்யப்படும். அறுவடை காலத்தில் உள்ளுர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் வர்த்தக பண்டவரி அதிகரிக்கப்படவுள்ளது. சமகாலத்தில் பெரிய வெங்காய, உருளைக்கிழங்கு உற்பத்திகள் சந்தைக்கு வருகின்றன. இதன் காரணமாக இவற்றின் மீதான விசேட வர்த்தக வரியை கிலோ ஒன்றுக்கு 40 ரூபா என்ற மட்டத்தில் பேணுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விளைந்த காலநிலை மாற்றங்களால் விவசாயிகளும் சிறிய அளவிலான ஆலைகளின் உரிமையாளர்களும் பெரும நஷ்டங்களை எதிர்கொண்டார்கள்; இவர்களுக்கு வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ஐந்து கோடி உச்ச வரம்பிற்குட்ட கடன்களுக்கான வட்டியும் அபராத தொகையும் முற்றுமுழுதாக நீக்கப்படும்; அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

சமூர்த்தி பயனாளிகளுக்காக வழங்கப்படும் கடன் முற்கொடுப்பனவுக்கான உச்சவரம்பு பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும். நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக வழங்கப்படுகின்ற 50 கிலோ உரப் பொதியின் நிவாரண விலை ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படுகிறது. விவசாய வர்த்தகங்களில் ஈடுபடுவோரது தனிநபர் வருமானத்தின் மீதான வரியின் உச்ச வரப்பு 24 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை குறைக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு அனுகூலம் தரும் விதத்தில், இறக்குமதி செய்யும் துணி வகைகள் மீதான வட் வரி நீக்கப்படவுள்ளது. உற்பத்திகளை ஊக்குவித்து வரிகட்டமைப்பை இலக்குவாக்குவது நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதான நோக்கம் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை குறைத்து தனிநபர் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது பிரதான இலக்காகும் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.