மகிந்த-சம்பந்தன் சந்திப்பில் நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்!

image_pdfimage_print

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பான விடயத்தில் சுமந்திரன் சொல்வது போன்று எந்த வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, உடனிருந்த செய்தியாளர்களின் தகவல்களின் படி எந்த கட்டத்திலும் மகிந்தவின் நியமனம் அரசமைப்பிற்கு முரணானது என சம்பந்தன் சொல்லவில்லை.

எனினும் சம்பந்தன் சொன்னார் என்று சுமந்திரன் கூறுகிறார். அனைத்து செய்திதளங்களும் அந்த செய்திகளை பிரசுரித்திருக்கின்றன. எனினும் எங்களின் தகவலின் படி சம்பந்தன் அவ்வாறானதொரு கருத்தை தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 124 அல்லது 126 எம்.பிக்களின் ஒப்பங்களோடு நாடாளுமன்றத்தை கூட்டச் சொல்கின்ற விடயத்தின் உண்மைத்த தன்மை இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. எனக்கு தெரியவே கூட்டமைப்பின் 5 அல்லது 6 எம்பிக்கள் கையெழுத்து வைக்கவில்லையென்று சொல்லியிருக்கிறார்கள். 3 பேர் வெளியில் இருக்கிறார்கள்.

கூட்டமைப்பை சேர்ந்தோரின் கனிசமானோரின் கையொப்பம் இல்லாமல் 126 என்ற எண்ணிக்கை எட்டப்பட்டமை சாத்தியமில்லாத விடயம் என மேலும்  என்.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.