கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இருவருக்கு 450 மில்லியன் வழங்கும் மஹிந்த!

image_pdfimage_print

த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கனடாவில் வைத்து மகிந்த தரப்பு பேரம் பேசியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

த.தே.கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஒரு முக்கிய கட்சியின் ‘செல்வம்’ மிக்க தலைவருக்கு 300 மில்லியன் வழங்குவதாகவும், கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக்கட்சியில் போட்டியிட்ட ‘சக்தி’மிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் வழங்குவதாகவும் மகிந்த தரப்பினால் பேரம் பேசப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் கூட்டப்படவுள்ள நாடாளுமன்றத்தில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்கள் சார்ந்த கட்சியும் மகிந்தவுக்கு எதிரான எந்தவித நிலைப்பாட்டுக்கும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக த.தே.கூட்டமைப்பு பிரமுகர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் எஞ்சியுள்ள ஒரே நம்பிக்கையான த.தே.கூட்டமைப்பு வெறும் 300 மில்லியனால் உடைக்கப்படுவதாக கவலையுடன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக டெலோ அமைப்பின் பிரித்தானியக் கிளையின் பொறுப்பாளர் சம்பந்தன் எம்மைத் தொடர்புகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், டெலோ அமைப்பானது ஜனநாயகத்திற்கு விரோதமான எந்த நடவடிக்கைக்கும் ஒருபோதும் துணைபோகமாட்டாது என்று தெரிவித்தார். டெலோ அமைப்பின் உயர்மட்டக்குழுக் கூட்டம் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இன்று மாலை கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களுக்குப் பாதகமான எந்த ஒரு முடிவை நோக்கியும் டெலோ செல்லமாட்டாது என்பதுடன், த.தே.கூட்டமைப்பின் முடிவுடனேயே டெலோ தொடர்ந்தும் தங்கியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நன்றி – ஐபிசிதமிழ்.