ரணிலுக்கு அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு எச்சரிகை!

“ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது. எனவே, அலரிமாளிகையைவிட்டு கௌரவமான முறையில் வெளியேறுங்கள். தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.”

இவ்வாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று இரவு நேரில் எடுத்துரைத்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந் தராஜபக்‌ஷ ஆகியோரின் விசேட பிரதிநிதியாக நேற்று இரவு, ஐ.தே.கவின் தலைவரை கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்தினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இதன்போது “ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினையை பெரிது படுத்தாமல் சுமூகமாக தீர்வுகாண்போம்.

உங்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என அறியக்கிடைத்தது. அது குறித்து கவனம் செலுத்தியுள்ளேன். அலரிமாளிகையை விட்டு வெளியேறுங்கள். அனைத்து வகைகளிலும் உதவிகள் வழங்கப்படும்” என்று கோட்டாபய குறிப்பிட்டள்ளார்.

“ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, அரசமைப்பின் பிரகாரம் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதை ஏற்பதற்கு நான் தயார்” என்று பிரதமர் ரணிலும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்று இருதரப்பும் அறிவித்துள்ளன.