தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்!

image_pdfimage_print

தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸூம் கலந்துகொண்டார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸூம் கலந்துகொண்டார்.

நிதியமைச்சசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை அடுத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை எந்த ஆர்ப்பாட்டங்களும் பேராட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இதொக தலைவருமான முத்துசிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில், நிதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பளப் பேச்சுவார்த்தை சுமூகமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம் என்று தெரிவித்தார் .

எதிர்வரும் 6 ஆம் திகதி தீபாவளி இடம்பெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கான முற்பணம் வழங்கப்பட்டுவிட்டது. சம்பளப் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நிதியமைச்சுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)