மயிரிழையில் உயிர் தப்பிய மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்!

image_pdfimage_print

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்-கின்றது.

இலங்கையின் தென்பகுதி கரையோர பிரதேசமான காலி மாவட்டத்தின் ஹக்மன தெனகம என்ற இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச பயணம் செய்த ஜீப் வண்டி லான் மாஸ்டருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது லான் மாஸ்டருடன் மோதிய கோட்டபாயவின் ஜீப் வண்டி பாதையிலிருந்து விலகி மரத்துடன் மோதி வண்டி அப்படியே நின்றிருப்பதாக ஹக்மன பொலிஸ் நிலைய பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் லாண்ட் மாஸ்ரரின் சாரதி காயமடைந்த நிலையில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் எந்தவித காயங்களுமின்றி தெய்வாதினமாக தப்பியிருக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மெதமுலவிலுள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச சகோதர்களின் தந்தையான அமரர் டீ.ஏ. ராஜபக்சவின் சிராத்த தினத்தை முன்னிட்டு அவர்களது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அனோமா ராஜபக்ச ஆகியோர் மெதமுல நோக்கி பயணமாகியிருக்கின்றனர்.

இந்த விபத்தை அடுத்து மற்றுமொரு வாகனத்தை வரவழைத்துக்கொண்டு அவரது மனைவியுடன் மெதமுலன இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எனினும் விபத்திற்குள்ளான ஜீப் வண்டி மற்றும் லாண்ட மாஸ்ரர் ஆகியவற்றை மேலதிக விசாரணைக்காக கையகப்படுத்தியுள்ள பொலிஸார் கோட்டாபய ராஜபக்சவின் சாரதியையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காகவே கோட்டபாய ராஜபக்சவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் வீரவர்தன தெரிவித்தார்.