மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக இன்று (08) அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் எனும் 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தற்போதைய அடை மழைக் காலநிலையினிடையே தனது வீட்டின் இருளைப் போக்குவதற்காக மின் விளக்கைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அதற்காக மின் விளக்கு ஒன்றைப் பொருத்திக் கொண்டு நின்றபோது அதன் மின்சாரத் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததாக வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அன்வர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.