மைத்திரி-மகிந்தவின் இரண்டாவது சதி இதுவா? இம்முறை சதித்திட்டம் பலிக்குமா?

image_pdfimage_print

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மைத்திரியின் இந்த நடவடிக்கை இரண்டாவது அரசியல் சதியென குற்றம் சுமத்தியுள்ளாா்.

 

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயற்பட்டுவரும் நிலையிலேயே அதே பாணியில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகளில் அரச தலைவர் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்திருந்தாா்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா இத் தகவலை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

சட்டவிரோத சதித்திட்டமொன்றின் ஊடாக ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பத்திற்குள் தள்ளிவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து இரண்டாவது சதித் திட்டத்தை அரங்கேற்ற தயாராகி வருகின்றனர். என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா குற்றம் சுமத்தியுள்ளாா்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றை கூட்டுமாறு வலியுறுத்தி சபாநாயகர் கருஜயசூரியவிடம் கடிதமொன்றை கையளித்திருந்த நிலையில், நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுமென ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளாா்.

தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக்கொள்ள முடியாது என்பது உறுதியாகியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டாது சட்டவிரோதமாக கலைப்பதற்கு மஹிந்த – மைத்ரி தரப்பு தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அஜீத் பீ. பெரேரா தெரிவித்துள்ளாா்.

எனினும் 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்றும் அஜீத் பீ.பெரேரா நிரூபித்துள்ளாா்.

இவ் விடயம் மைத்ரி – ரணில் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அர சாங்கம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து உருவாக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்றில் ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தில் மிகத் தெளிவாக வரையப்பட்டுள்ளது.