ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அதிரவைத்த மைத்திரியின் எச்சரிக்கை!

image_pdfimage_print

அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உள்நாட்ட்டிலும், வெளிநாடுகளினதும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மேலதிகமாக, அவற்றை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக மேலும் பல கடுமையான தீர்மானங்களை எடுக்கப்போவதாக சிறிலங்கா ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து அவருக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் முதல் முறையாக நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்திய பகிரங்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்ரிபால சிறிசேன, முன்னோக்கி வைத்த பாதத்தை எந்த காரணத்திற்காகவும் பின்னால் எடுக்கப் போவதில்லை என்று சூளுரைத்திருந்தார்.

அதன் பின்னர் பெரும்பான்மை இன்றிய நிலையில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மேலும் சில துரும்புகள் தன்வசம் இருப்பதாக நேற்றைய தினம் கூறியிருக்கின்றார்.

“நான் ஒரு துரும்புச் சீட்டையே பயன்படுத்தினேன். தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு என்னிடம் மேலும் பல துரும்புச் சீட்டுக்கள் கைவசம் இருக்கின்றன” என்று சிறிலங்கா அரச தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

நவம்பர் 8 ஆம் திகதியான நேற்றை தினம் வியாழக்கிமை இரவு நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே சிறிலங்கா ஜனாதிபதி இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் போது மஹிந்த ராஜபக்சவை இணைத்துக்கொண்டு உருவாக்கியுள்ள தனது புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை தடையின்றி முன்னோக்கி கொண்டு செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினரும் உதவ வேண்டும் என்றும் மைத்ரிபால வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அதனை செய்யாது நாடாளுமன்றில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டால் அரசியல் சாசனத்திற்கும், நாட்டின் சட்டத்திற்கும் உட்பட்டு தன்னால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு தன்னிடம் பல துரும்புச் சீட்டுக்கள் கைவசம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி உருவாக்கியுள்ள புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு எந்தவித தடையையும் ஏற்படுத்தாது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினால் அவர்களின் ஓய்வூதியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

எனினும் நாடாளுமன்றத்தை கலைக்கும் தேவை தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் இதுவரை எடுத்த அனைத்துத் தீர்மானங்களும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே மேற்கொண்டதாகவும் கூறியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, அவற்றுக்கு சட்ட நிபுணர்களினதும், அரசியல் சாசனம் தொடர்பான நிபுணர்களினதும் ஆலோசணைகளையும் பெற்றுக்கொண்டதாகவும் மீண்டும் தெரிவித்திருக்கின்றார்.