ரணில் பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்தாலும்; பிரதமர் பதவி இல்லை! மைத்திரி உறுதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேற்று முந்தினம் சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான ஒரு விடயத்தை கூறியுள்ளமை தற்போது வெளிவந்துள்ளது.அதாவது ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்தாலும் தான் மீண்டும் ரணிலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யப்போவதில்லை என கூறியிருக்கிறார். குறித்த கூற்று ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று முந்தினம் புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரணில் தரப்புக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவை செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த கூட்டமைப்பு, தாம் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தமையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கூறினர். இதன்போதே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று முந்தினம் மாலை தனது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் தமது பெருமான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் தான் செய்வதாகவும் அதுகுறித்து கவலையில்லாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.