12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம்! மைத்திரிக்கு சாதகமாக அமையுமா?

image_pdfimage_print

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு, ஹக்கீம் தலைமையிலான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதன் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து வந்த, இந்த இரண்டு கட்சிகளினதும், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்காவுக்கு ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 13ஆம் நாள் இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்புவர் என்று கூறப்படுகிறது.

அதற்கு மறுநாள், வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.